இயக்குநர்கள் பேரரசு, விக்ரமன் ஆகியோரது படங்களில் அடிக்கடி தென்படும் முகம் சினிமா துணை நடிகர் ஜெயமணி. அவர் அண்மையில் சினி உலகம் தளத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து..


'நிறைய காமெடி நடிகர்கள் பெரிய நடிகர்கள் கூடவே இருப்பார்கள். அந்த மாதிரி வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. விவேக் அல்லது வடிவேலு உடனேயே நிறைய பேர் இருப்பார்கள். அப்படி இருந்தால்தான் அவர்கள் கவனிப்பார்கள். அவர்களுடன் நடிக்கலாம் என்பார்கள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஆபிஸ் லீவு கேட்டால் கிடைக்குமா? லீவ் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் போக முடியுமா? லீவ் எடுத்தால் என்ன சொல்வார்கள் என்பதே என்னுடைய சிந்தனையாக இருக்கும். இப்படி கமிட்மெண்ட்டிலேயே என்னுடைய நேரம் போயிடுது.


மற்றபடி இயக்குநர்கள் வாசு, விக்ரமன், மற்றும் பேரரசு படங்களில் நான் பெரும்பாலும் இருப்பேன். பேரரசு ஊர் பெயரில்தான் படம் எடுப்பார். அத்தனை ஊரிலும் நான் இருப்பேன். பேரரசு எனக்கு சொந்தக்காரர்தான். ‘அண்ணே எல்லாரும் உங்களைக் காமெடியனாதான் பாக்கறாங்க.நாந்தான் வில்லனா பாக்கறேன்’ என்பார்.


அவர் படத்தில் வில்லன்களுடன்தான் நான் வருவேன். நடிகர்களில் விஜயகாந்த் ரொம்ப தங்கமானவர். அரசியலில் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் எம்.ஜி.ஆர் மாதிரிதான். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். பழைய காலத்தில் எல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் காரவன் கலாசாரம் கிடையாது. மக்களோடு மக்களாகதான் நடிகர்கள் இருப்பார்கள். வெளியே அமர்ந்தபடி ரசிகர்களுடன் உரையாடுவார்கள்.


சிவாஜி - எம் ஜி ஆர் இருவரும் இதைத்தான் செய்தார்கள். ஆனால் அந்தக் கலாசாரம் அப்படியே பிறகு மாறிவிட்டது. ரசிகர்களுடன் நடிகர்கள் உரையாடுவது குறைந்துவிட்டது. ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொருவருடனும் உரையாடுவார். எல்லோருக்கும் உதவும் குணம், எல்லோரிடமும் இரக்கப்படும் குணம் அவருக்கு உண்டு. அரசியல்தான் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது' என தனது பேட்டியில் நடிகர் ஜெயமணி குறிப்பிட்டுள்ளார்.


அண்மையில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது பிள்ளைகள் மிக எளிமையாக வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.