பொன்னியின் செல்வன் பட பாகங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் கார்த்தியை வைத்து நடிகர் ஜெயம் ரவி படம் இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement


கடந்த ஏப்.28ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் வெளியாகி கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இந்தப் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியும், பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் நடித்து அந்த அந்தக் கதாபாத்திரங்களாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று கவனமீர்த்துள்ளனர்.


மேலும் சக நடிகர்களான இருவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு, ப்ரொமோஷன் பணிகளின்போது நெருங்கிய நண்பர்களாக உருவெடுத்தனர். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பு தாண்டி தற்போது கார்த்தியை வைத்து படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயம் ரவி தனக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இருப்பதாகவும், இயக்குநர் மணிரத்னம் கூட படம் இயக்க ஊக்குவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


”பொன்னின் செல்வன் பாகம் இரண்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எனது நடிப்புக்கு பாராட்டுக்கள் வந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி. இப்படிப்பட்ட மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியமானது.


இயக்குநர் மணிரத்னத்தால் தான் அது முடியும். நான் நிறைய கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஒரு கதையின் ஒன்லைனை மணிரத்னத்திடம் பகிர்ந்தேன். அதைக் கேட்ட மணிரத்னம், நன்றாக உள்ளது. நீ கதை எழுது என்று கூறினார். 


கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன், கார்த்தி என் இயக்கத்தில் நடிப்பார்” என்று கூறியுள்ளார். ஜெயம் ரவியின் இந்த நேர்காணல் கார்த்தி, ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயராம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா,  ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 உலகமெங்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 


இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியான 2 நாள்களில் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் வாசிக்க..


Salman Khan: ‘பெண்களின் உடல் மதிப்புமிக்கது; அது ஆடைகளால் மூடப்பட வேண்டும்’ - நடிகர் சல்மான்கான்