தன்னுடைய படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு விதிக்கப்படும் ஆடை கட்டுப்பாடு குறித்து நடிகர் சல்மான் கான் விளக்கமளித்துள்ளார். 


கிஸி கி பாய், கிஸி கி ஜான்


பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் நடிப்பில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி  கிஸி கி பாய், கிஸி கி ஜான் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்த நிலையில், சித்தார்த் நிகம், க்ரீத்தி சனோன், ஜெகபதி பாபு, மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வீரம்’ படத்தின் ரீமேக் ஆகும். 


கிஸி கி பாய், கிஸி கி ஜான்  படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. வீரம் படத்தின் அடிப்படை கதையை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு திரைக்கதையில் செய்யப்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிருப்திகுள்ளாக்கியது. ஆனால் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படம் வசூலில் ரூ.100 கோடியை தாண்டி சாதனைப் படைத்தது. 


இதனிடையே இந்த படத்தில் நடித்திருந்த நடிகை பலக் திவாரி பேட்டி ஒன்றில், சல்மான்கான் படத்தின் ஷூட்டிங்கில் விதிக்கப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதாவது , ‘பெண்கள் வி வடிவ காலர் வைக்கப்பட்ட டி-ஷர்ட் அணியக் கூடாது. உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். மேலும் சல்மான் தனது படத்தில் இருக்கும் அனைத்து பெண்களும் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புகிறார்’ எனவும் பாலக் திவாரி கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. 


சல்மான்கான் விளக்கம்


இதற்கிடையில் தனியார் ஊடகத்தில் ஒளிபரப்பாகும்  ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம், இணையத்தில் விமர்சிக்கப்பட்ட சல்மான்கானின் ஆடை கட்டுப்பாடு விதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “பெண்களின் உடல்கள் மிகவும் விலை மதிப்புமிக்கது . அது எவ்வளவு அதிகமாக மூடப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார். 


மேலும், ‘நீங்கள் ஒரு கண்ணியமான படத்தை எடுக்கும்போது எல்லோரும் அதை குடும்பத்துடன் பார்க்கச் செல்கிறார்கள். ஆடை கட்டுப்பாடு விவகாரத்தில் பிரச்சனை பெண்களிடம் இல்லை, ஆண்களிடத்தில் தான் உள்ளது. காரணம் ஆண்கள் பெண்களை உற்று நோக்கும் விதம், அப்படிப்பட்டவர்கள் ஒருவரின் சகோதரி, மனைவி, தாய் என யாரைப் பார்த்தாலும் எனக்கு பிடிக்கவில்லை’ எனவும் சல்மான்கான் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், தான் திரைப்படங்களை இயக்கும் போது, ​​பெண்களை முறைத்துப் பார்க்கும் காட்சிகளை வைக்கமாட்டேன் என சல்மான்கான் தெரிவித்துள்ளார்.