ஜெயம் ரவி
எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தவிர்த்து ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை , ஜீனி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் இரண்டாவது பாகமும் உருவாக இருக்கிறது. நடிப்பு தவிர்த்து ஜெயம் ரவி யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தக் லைஃப் படம் பற்றி ஜெயம் ரவி
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகு இந்த படத்தில் இருந்து அவர் விலகினார். தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. தற்போது பிரதர் படத்தின் ப்ரோமோஷனின் போது தக் லைஃப் படம் பற்றி ஜெயம் ரவி வெளிப்படையாக பேசியுள்ளார்.
" கமல் சார் இயக்கிய ஆளவந்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். டைரக்ஷன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் நான் அந்த படத்திற்கு போனேன். ஆனால் கமலை பார்த்து நான் இன்பையர் ஆனேன். கமல் சாரை காப்பியடிக்க எல்லாம் யாராலும் முடியாது. கமலைப் பார்த்து இன்ஸ்பையர் ஆன நிறைய நபர்களில் நானும் ஒருவன் என பெருமையாக சொல்வேன். அவர் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்துவிட்டார். சினிமாவில் அவர் அறிமுகபடுத்திய பல விஷயங்கள் இன்று பயன்படுகின்றன. அந்த மாதிரியான ஒரு நடிகருடன் சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய பெருமைதான். எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படத்தில் நான் இருந்தேன். பின் ஒரு சில காரணத்தால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. கமல் சார் படத்தில் நடிக்காதது எனக்கு ஒரு பெரிய வருத்தம் தான். மற்றபடி என்னைப் போன்ற நிறைய நடிகர்களுக்கு கமல் ஒரு மிக்கப்பெரிய ஊக்கசக்தியாக எப்போதும் இருந்து வருகிறார்" என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்