தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் பொன்னியின் செல்வம் படம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ஒரு சீக்ரெட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு காற்று நின்றுவிட்டதே என்ற வசனத்தை கூறுமாறு இயக்குநர் மணி ரத்னம் என்னிடம் சொன்னார். நான் உடனே காற்று நின்று விட்டதே என்று கூறி கீழே பார்த்தேன். உடனே கேமரா அருகே இருந்த அவர் பொன்னியின் செல்வன் எப்போதும் கீழே பார்க்கமாட்டார் என்று வேகமாக கத்தினார். அதன்பின்னர் அந்தப் படம் முழுவதும் நான் அதை பின்பற்றினேன்”  எனத் தெரிவித்துள்ளார். 


 






ராஜாக்கள் எப்போதும் கீழே பார்க்க மாட்டர்களை என்பதை குறிக்கும் வகையில் அவர் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். 


பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் ரிசர்வேஷன், சனிக்கிழமை இரவில் துவங்கிய நிலையில், இதுவரை 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதனால், 4.50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. இதுவரை 225 சினிமா அரங்குகளில் மட்டுமே, பொன்னியின் செல்வன் 1 படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் துவங்கியுள்ளது. மீதம் உள்ள பெரிய அரங்குகளில், இன்றும் நாளையும் டிக்கெட் புக்கிங் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் இப்படத்திற்கான டிக்கெட் பதிவீடு மும்முராக நடைபெற்று வருகிறது.


 






பீவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் முன்பதிவு துவங்கினால், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் கூடுதல் வசூல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பாக, விக்ரம் பீஸ்ட் மற்றும் வலிமை போன்ற படங்கள் முன்பதிவிலேயே நல்ல வசூலை பெற்றது. இந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் படமும் இணைந்துள்ளது.