குறிஞ்சி என்றதும் நினைவுக்கு வருவது மலை சார்ந்த நிலம். அதோடு குறிஞ்சி மலரும் கண்முன் வந்துபோதும். ஆம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர் இப்போது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் படர்ந்துள்ளது. குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பலரும் பகிர்ந்துவருகின்றனர். குறிஞ்சி மலரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. நீலகிரியில் மலர்ந்து நீலக்குறஞ்சி மலர்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது.


மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அருகில் உள்ள கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மலையோர பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் மலர்ந்துள்ளன. சிக்மங்கலூர்(Chikmagalur), நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் குறிஞ்சி மலரின் வருகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பதால் மற்ற பூக்களில் இருந்து இது தனித்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் 250 வகையான குறிஞ்சி செடிகள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டங்களில் நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி, வெள்ளை குறிஞ்சி என மூன்று வகையாக குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன.


நீலகிரி மலைத் தொடரில்  நீல வண்ணத்தில் குறிஞ்சிப் பூக்கள் படர்ந்திருப்பதை பார்ப்பதற்கே வான் மேகங்களில் நீலம் பட்டு கடல் நீலமாக காட்சியளிப்பதை போல, நீள மலை முழுவதும் நீல நிறத்தில் இருக்கும். 






குறிஞ்சி மலர்கள்:


Downtoearth என்ற இதழின்படி, குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சியின் அறிவியல் பெயர் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் (Strobilanthus kunthianus) எனப்படும். 46 குறிஞ்சி மலர் வகைகள் இந்தியாவில் காணப்படுகிறது.


3 அடி உயரமுள்ள குறிஞ்சி ஒரு குறுந்தாவரமாகும். இது  கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்ந்த வெப்பநிலை உள்ள பகுதிகளில் வளரக்கூடியதன்மை கொண்டவை. குறிஞ்சி மலர்கள் ஒரு முறை மலர்ந்துவிட்டு,வாடி மண்ணில் மடிந்துவிடும். அதன் விதைகள் மண்ணில் வேரூன்றி மீண்டும் வளர தொடங்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.






குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை ஒரே நேரத்தில் முளைத்து பூக்கின்றன. இந்த பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் மருத்துவ குணம் மிகுந்தது.


வாய்ப்பிருப்பவர்கள் நேரில் சென்று குறிஞ்சி மலர்களை காணலாம். அப்படி இல்லையா, டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று குறிஞ்சி மலரின் ரம்மியமான வீடியோ, புகைப்படங்களை காணுங்கள். மறந்துடாதீங்க..