அகிலன் படம் முழுக்க முழுக்க கஷ்டப்பட்டு எடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அகிலன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள அகிலன் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த மார்ச் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 70 லட்சம் பார்வைகளை படத்தின் ட்ரெய்லர் கடந்துள்ளது. 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி, அகிலன் படம் உருவானதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த படத்தின் உணவு அரசியல் பற்றி பேசும் இப்படத்தின் வசனங்களும் பெரும் கவனம் ஈர்த்தது. 


அந்த நேர்காணலில், ”நாங்க மட்டுமல்ல மொத்த படக்குழுவும் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்க டீம், கப்பல் டீம், பாதுகாப்பு டீம் என எல்லாத்தையும் ஒருங்கிணைக்கிறது சவாலா இருந்துச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் கடற்கரைக்கு போய் பிளான் பண்ணுவாங்க. பொதுவாக கப்பல்ல போய் படம் எடுக்க அனுமதி கிடையாது. கப்பல் எப்போ வருதோ அப்ப எடுத்துக்கலாம். கரையில ஒரு சீன் எடுத்துட்டு இருப்போம். கப்பல் வருதுன்னு தெரிஞ்சா அப்படியே எல்லாத்தையும் நிறுத்திட்டு கப்பல் காட்சி எடுக்கப் போயிடுவோம்.


முன்னதாகவே அதற்கான ரிகர்சல் எல்லாம் பாத்து வச்சதால எல்லாம் கொஞ்சம் ஈசியா இருந்துச்சி. கப்பல் கேப்டன் மனசு வச்சா கப்பல் இஞ்சின் இருக்கற அறையில ஷூட் நடத்த அனுமதி கிடைக்கும். சிலர் ஓகே சொன்னாங்க. சிலர் மாட்டேன்னு சொல்லிட்டாங்க. 


அகிலன் படத்துல முதல் பாதி நீங்க என்ன திரையில பார்ப்பீர்களோ அதற்கு எதிராக 2வது பாதி அமையும். திரைக்கதை, இசை, காட்சி அமைப்புகள் எல்லாமே ரசிகர்களை திருப்திப்படுத்தும்”  என ஜெயம் ரவி அந்த நேர்காணலில் கூறியுள்ளார். முன்னதாக ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தையும் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாத விமர்சன ரீதியாக வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.