ஜெயம் ரவி


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமாகிய படம் ஜெயம். இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இத்துடன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அண்ணன் இயக்கத்தில் மீண்டும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்தார். ரொமாண்டிக் ஆக்‌ஷன் ஹீரோவாக தனது கரியரைத் தொடங்கிய ஜெயம் ரவியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி என பலவிதமான ஃபேமிலி என்டர்டெயினர் படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனது படங்களுக்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்கிறார். 


தாஸ், இதயத் திருடன், தாம் தூம், தில்லாலங்கடி, ஆதி பகவன், நிமிர்ந்து நில், சகலகலா வல்லவன், பூலோகம், போகன், வனமகன், டிக் டிக் டிக், பூமி, அகிலன், இறைவன் உள்ளிட்ட அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்தப் படங்களில் ஜெயம் ரவியின் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. 






பொன்னியின் செல்வன்


ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் தான். இப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் தற்போது இயக்கிவரும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருந்து பின் இந்தப்படத்தில் இருந்து விலகினார் ஜெயம் ரவி. 


வாழ்த்து தெரிவித்த ஜெயம் ரவியின் மனைவி






சினிமாவின் ஜெயம் ரவி 21 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு அவரது மனைவி ஆர்த்தி ஜெயம் படத்தின் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ் திரையுலகினர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஜெயம் ரவிக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஜெயம் ரவி ஜீனி, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.