ஜெயம் ரவி -ஆர்த்தி
தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்கப்பட்ட காதல் ஜோடிகளில் ஒன்று ஜெயம் ரவி - ஆர்த்தி. கடந்த 2009 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து காதல் திருமணம் செய்துகொண்டார்கள் . இந்த தம்பதிக்கு ஆரவ் மற்றும் ஆயான் என்று இரு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. ஆனால் ஜெயம் ரவி மற்றும அர்த்தி இருதரப்பிலும் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் தனது விவாகரத்தை தெரிவிக்கும் வகையில் நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.
" நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்." என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
பிறந்தநாளன்று விவாகரத்திற்கு மனு
இன்று ஜெயம் ரவி தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் அவர். இந்த மனு அக்டோபர் 10 குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தனது பிறந்தநாள் கொண்டாடும் அதே நாளில் தனது விவாகரத்தை பதிவு செய்த ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : Selvaraghavan : நீங்க அவ்ளோவா காஞ்சு போயா இருக்கீங்க.. ஆன்மீக குருக்களா? வெளுத்து வாங்கிய செல்வராகவன்