சீரியலுக்கு வருகை தந்துள்ள ஜெய்சங்கரின் இளைய மகன் சஞ்சய் சங்கரால், விஜய் டிவி பாக்கியலட்சுமி நெடுந்தொடர் களை கட்டியுள்ளது.
விஜய் டிவியில் அன்றாடம் மாலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்தத் தொடரை 'டேவிட்' என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் தற்போது நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் இணைந்துள்ளார்.
தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட், ஃப்ரைடே ஹீரோ:
பட்டதாரியான ஜெய்சங்கர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவருடைய மிடுக்கான தோற்றம், எடுப்பான முகவாகு, அழுத்தமான நடிப்பு அவருக்கு எண்ணிலடங்கா ரசிகர்களை ஈட்டியது. ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.
பின்னாளில் தமிழ்த் திரைப்படத்தின் முன்னணி வில்லனாகவும் வலம் வந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் கவுதமியின் அப்பாவாக, கமலுக்கு வில்லனாக வரும் காட்சிகளை மறக்க முடியாது. ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் விஜய் சங்கர் ஓர் கண் மருத்துவர். இளைய மகன் சஞ்சய் சங்கருக்கு நடிப்பில் ஆர்வம். இவர் சொந்த தொழில் செய்துவந்தாலும் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் தற்போது சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். இவர் தற்போது பாக்யலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி செய்யும் தொழிலுக்கு ஆர்டர் தந்து ஆதரிக்கும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் சஞ்சய் சங்கர் களமிறங்கியுள்ளார். அசப்பில், நமக்கு வெகு நிச்சயமாக ஜெய்சங்கரை இவர் நினைவுபடுத்திவிடுகிறார்.
பாக்கியலட்சுமி, ஒன்லைன் சொல்ல வேண்டுமென்றால், 36 வயதினிலே ஜோதிகாவை குடும்பமே ஓரங்கட்ட, மட்டம்தட்ட அவர் சுய தொழிலில் மிளிர்வார் அல்லவா? அதுபோலத்தான் நம்ம பாக்கியலட்சுமியைக் குடும்பமே நோகடிக்க, அவர் வெட்டினாலும் நீரை வார்க்கும் பாறை போல் அன்பை மட்டும் பொழிந்து கொண்டு சுய தொழிலும் முன்னேறுகிறார்.