ஜப்பான் நாட்டை சேர்ந்த மியாவாக்கி என்ற தாவரவியல் அறிஞர், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மரங்கள் தங்களுக்கு தேவையான சூரிய ஒளியைப் பெற்று நீண்ட உயரத்திற்கு வளர்கின்றது. இதனால் மழை மேகங்களை எளிமையாக ஈர்த்து அதிகப்படியான மழை தருகிறது. மேலும் மரம் வளர்ப்பதற்கு அதிக அளவிலான இடைவெளியில் தேவை இல்லாமல், சுமார் ஒரு அடி அகல இடைவெளியில் அதிகப்படியான மரங்களை வைத்து பராமரிக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இவ்வாறு குறைந்த இடத்தில் அதிக அளவிலான செடிகளை வைப்பதன் மூலம் மழை மேகங்களை ஈர்த்து மழை அதிகமாக கிடைக்கும், குளிர்ந்த சூழல் உருவாகும் அதிகப்படியான பறவைகள் அமர்ந்து செல்லும். இதனால் மரங்கள், செடி, கொடிகள் உற்பத்தி அதிகரிக்கும் என்பதை கண்டறிந்தார். இதனை பல்வேறு நாடுகளில் மியாவாக்கி காடுகள் என்று தாவரவியல் அறிஞரின் பெயரிலே வளர்க்கத் தொடங்கி வருகின்றனர்.



 

இந்நிலையில் இதனை இணையதளம் வாயிலாக அறிந்த தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பறையப்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, அபுதாபியில் அரசு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த மியாவாக்கி காடுகளின் பயனை அறிந்து, தனது விவசாய நிலத்தில் மர கன்றுகளை வைக்க வேண்டும் என எண்ணி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். தனது நிலத்தில் சுமார் 50 சென்ட் விவசாய நிலத்தில் அடர்ந்த வனப் பகுதிகளை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டார்.  இந்த 50 சென்ட் நிலத்தில் ஒரு அடி இடைவெளியில் வேம்பு, புங்கன், அரசன், கேக்கு, கொய்யா, மா, பலா, சீதா, நாவல் உள்ளிட்ட 100 வகையான ஆறாயிரம் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க தொடங்கினார். இந்த மரக்கன்றுகளை ஒரு ஆறு மாதம், ஒரு வருட காலத்திற்கு நன்றாக பராமரித்தால், அதன் பிறகு அதுவே தானாக வளர்ந்து விடும் என்பதால், முதலில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதற்கு தனியாக ஒரு ஆளை வைத்து ரூ.5 இலட்சம் வரை செலவு செய்து பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.

 



 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த அடர்ந்த வனப்பகுதியில், தற்பொழுது நீண்ட மரங்களாக வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக காட்சி அளித்து வருகிறது. இந்த இடத்தில் மாலை நேரங்களில் ஏராளமான பறவையினங்கள் வந்து செல்கிறது. அதேபோல் இந்த பகுதிக்கு வந்தால் வெப்பம் கடுமையானதாக இருந்தாலும், குளிர்ந்த சூழலை உருவாக்கி வருகிறது. மாலை நேரங்களில் பல்வேறு வகையான பறவைகள் வந்து அமர்ந்த கூச்சலிடும் சத்தத்தையும் கேட்க முடிகிறது. 

 

தற்போது விவசாய நிலங்கள் அழிப்பு, மரங்கள் மற்றும் காடுகள் அழிப்பு என்ற பல்வேறு வகையான சூழல் நிலவி வரும் நிலையில், இது போன்ற அடர்ந்த வனப் பகுதிகளை குறைந்த இடத்திலேயே உருவாக்கமுடியும் என்பதை அரசு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  அதேபோல மியாவாக்கி காடுகளை உருவாக்குபவர்களுக்கு நல்ல ரக மரக்கன்றுகள் வாங்க 100 ரூபாய் வரை செலவாகிறது.  எனவே அரசு மியாவாக்கி காடுகளை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மரக்கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். 

 

வனத்துறையில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம் காடுகள் மற்றும் மலைப் பகுதியை ஒட்டியுள்ளவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை கொடுத்து, ஆண்டுதோறும் வனத்துறையினர் பார்வையிட்டு, அதனுடைய பராமரிப்பு பணி செலவிற்காக ஒரு கன்றுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதே போல இந்த மியாவாக்கி காடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்.



 

இயற்கையின் மீதும் இயற்கை வளங்களின் மீதும் அக்கறை கொண்டு வரும் தமிழக அரசு மியாவாக்கி காடுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. எனவே மியாவாக்கி காடுகளை உருவாக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம்  விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளனர்.