தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெய். சுப்பிரமணியபுரம் படம் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து கோவா, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெய் தன்னுடைய படங்களின் பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பங்கேற்காமலே இருந்து வந்தார். 


இந்த நிலையில், நடிகர் ஜெய் மகளிர் தினத்தன்று திரைத்துறையினர் மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு அசத்தலான காரியத்தை செய்துள்ளார். மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழ் முன்னணி திரைத்துறையின் பெண் செய்தியாளர்களுக்கு நடிகர் ஜெய் தனது சார்பாக பட்டுப்புடவையை அன்பளிப்பாக அளித்துள்ளார். அவரது இந்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 




தான் நடிக்கும் திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜெய் தவிர்த்து வந்தது அவர் மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இருப்பினும் அவர் பெரியளவில் இதை கண்டுகொள்ளாமல் இருந்தார். பின்னர், திடீரென சமீபத்தில் இசையமைப்பாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்தார். இதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். மேலும், அப்போது இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பதாக வாக்குறுதியும் அளித்தார். 


இந்த நிலையில், நடிகர் ஜெய் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவைகளை அன்பளிப்பாக அளித்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது. திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக  தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், ஜெய்யின் அன்பளிப்பான அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத் மற்றும் சகோதரி சந்தியா ஆகியோர் மூலமாகவே ஒவ்வொரு பெண் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். 




இந்த பட்டுப்புடவை வழங்கல் பற்றி நடிகர் ஜெய், “நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பெண் பத்திரிகையாளர்களை பார்க்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும், வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன். அதனால், அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்" என்று நெகிழ்ச்சியடையும் வகையில் கூறியுள்ளார். 


நடிகர் ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் ஏற்கனவே கலகலப்பு 2ம் பாகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெய் தீவிர விஜய் ரசிகர் ஆவார். அவரது உடல்மொழியும், நடிப்பும் நடிகர் விஜயை போன்றே இருக்கும் என்பதும், இருப்பினும் ஜெய்யின் யதார்த்தமான நடிப்பால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண