இம்ரான் கான்


பாலிவுட் திரையுலகில் 2008ம் ஆண்டு வெளியான 'இல் ஜானே து... யா ஜானே நா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் இம்ரான் கான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்ற இப்படத்தில் இம்ரான் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது.


அதன் தொடர்ச்சியாக  ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்லி பெல்லி, மேரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான 'கட்டி பட்டி' படத்தில் நடித்திருந்தார். 


இம்ரான் கான் பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை பல மன அழுத்தங்களை சந்தித்துள்ளார். 2011ம் ஆண்டு இம்ரான் கான்  - அவந்திகா மாலிக் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 


இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு நடிகை லேகா வாஷிங்டன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருவரும் காதலித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்தனர்.


நடிகை லேகா வாஷிங்டன் கோலிவுட்டில் ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.  அவர் முதல் மனைவி அவந்திகாவுக்கு பிறந்த பெண் குழந்தை இமாராவை தற்போது இம்ரான் கான் மற்றும் லேகா வாஷிங்டன் இருவரும் சேர்ந்து வளர்த்து  வருகிறார்கள். 


என் குழந்தையை அடித்தால் கொலை செய்வேன்


சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் இம்ரான் கான் தன் சின்ன வயதில் தன்னை பள்ளியில் ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதைப் பற்றி பேசினார். தொடர்ந்து பேசிய அவர் தன்னை அடித்தது போலவே தனது மகளின் மேல் ஆசிரியர் கை ஓங்கினால் தான் கொலை கூட செய்யத் தூண்டப் படுவேன் என்று இம்ரான் கான் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானபின் தான் நடிக்கும் படங்களில் தவறான சித்தரிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.