வளரும் ஹீரோக்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் அங்கீகாரம் உத்வேகம் அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்.ஜி.எம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


பிரபல கிரிக்கெட் வீர தோனி, சினிமா தயாரிப்பில் களம் கண்டுள்ளார். ‘தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம்’ சார்பில் முதல் படமாக தமிழில் “எல்.ஜி.எம்” (Lets Get Married) உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல்  இசையமைத்துள்ளார் ரமேஷ் தமிழ்மணி. காதலை மையமாக வைத்த காமெடியான காட்சிகளை கொண்ட படமாக எல்.ஜி.எம் எடுக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் எல்லாம் வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி எல்.ஜி.எம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதன் நிகழ்ச்சியில் தோனியும் பங்கேற்று தமிழ்நாடு பற்றியும், ரசிகர்கள் பற்றியும் நெகிழ்ச்சியாக பேசினார். இதனிடையே எல்.ஜி.எம் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே எல்.ஜி.எம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஹரிஷ் கல்யாண், “எனக்கு திரையரங்கில் படம் வெளியாகி 3 வருடங்கள் மேல் ஆகிறது.  இந்த இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக கொரோனாவுக்கு அப்புறம் எந்த படம் தியேட்டரில் வரும், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என நினைத்து பார்த்துள்ளேன். விஜய் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள்  படம் வெளிவரும் போது மக்கள் சுலபமாக திரையரங்கு சென்று படம் பார்க்கிறார்கள். 


நானே விஜய்,ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்துவிடுவேன். ஆனால் எங்களைப் போல் இளம் ஹீரோக்கள் படம் எப்படி இருக்கும் என்ற கவலை இருந்தது. ஆனால் போன வருஷம், இந்த வருஷம் வந்த குட்நைட் , லவ் டுடே, போர் தொழில் போன்ற படங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.  எங்களை மாதிரி வளரும் ஹீரோக்களுக்கு அது உத்வேகம் அளிக்கிறது. அந்த நம்பிக்கையோடு தான் எனது படங்கள் வெளியாக உள்ளது. 


இந்த படத்தை பற்றி பேசும் போது, தமிழ்மக்களை பொறுத்தவரை நாம் உணர்வுப்பூர்வமாக இணைந்தவர்கள். அந்த உணர்வுகளால் தான் தயாரிப்பாளராக தோனி முதல் படமாக தமிழில் படம் தயாரித்துள்ளார். அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர். எல்.ஜி.எம் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது எண்ணி சந்தோசப்படுறேன். இதற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.