காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியும், கபினி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணை 124 அடியில் 101 அடியாகவும், கபினி அணை 84 அடியில் 81 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டு அணைகளில் இருந்து நீர் திறப்பு என்பது வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியவுடன், கடந்த சனிக்கிழமை மாலை கபினியில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 2400 கன அடி என மொத்தம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால், நீர் திறப்பு என்பது, வினாடிக்கு 7,000 கனஅடி, 12,000 கனஅடி என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2000 கனஅடி என மொத்தம் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்ட 4800 கன அடி தண்ணீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இன்று காலை வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, தற்பொழுது 2500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாளை மாலைக்குள் 17,000 கன அடி நீரும் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வருவதால், காவிரி ஆற்றங்கரையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை தீவிரத்தால் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கும் போது கவனமாக குளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.