தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் காமெடி கிங் என கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் கவுண்டமணி. 70ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட கவுண்டமணி தவிர்க்க முடியாத ஒரு கலைஞன். காலத்தால் அழிக்கமுடியாத கடந்துவிட முடியாத திறமையாளர் கவுண்டமணியின் 85வது பிறந்த தினம் இன்று.
கூட்டத்தில் ஒருவராக தலைகாட்டிய கவுண்டமணியின் முதல் படமாக கருதப்பட்டது 1970ம் ஆண்டு வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' திரைப்படம். இருப்பினும் பாரதிராஜாவின் அறிமுக படமான '16 வயதினிலே' படத்தில் பரட்டையாக நடித்த ரஜினியின் கூட்டாளியாக அவரை ஏற்றிவிடும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் பெற்றார். அப்படத்தில் அவர் பேசும் 'பத்த வெச்சிட்டியே பரட்ட' வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.
நகைச்சுவை கதாபாத்திரங்கள் கவுண்டமணிக்கு கைவந்த ஒன்று என்றாலும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டகாரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கவுண்டமணி - செந்தில் காம்போ தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட சூப்பர்ஹிட் ஜோடிகளானார்கள். அவர்களின் கூட்டணி காமெடி பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. கவுண்டமணியின் நக்கலும் நையாண்டியும், அப்பாவி தனமாக முகத்தை வைத்து கொண்டு குசும்பு செய்யும் செந்திலும் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தது. இவர்களை போன்ற ஒரு வெற்றி காம்போ இனி அமையுமா என்பது சந்தேகம் தான். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி உச்சத்தில் இருந்ததற்கு பெரும் பங்களிப்பு இந்த இரட்டையர்களின் காமெடி தான் என்றால் அது மிகையல்ல.
செந்திலுடன் மட்டுமின்றி நட்சத்திர நடிகர்களுடன் அவருக்கு இருக்கும் அந்த கனெக்ட் வேறு எந்த ஒரு நகைச்சுவை நடிகருக்கும் அந்த அளவுக்கு இருக்காது எனலாம். ஹீரோக்களையும் விட்டு வைக்காமல் அவர்களையும் கவுண்டர் கொடுத்து கலாய்ப்பது கவுண்டமணியின் ஸ்பெஷாலிட்டி. அந்த வகையில் சத்யராஜ், ரஜினி, கமல், கார்த்திக், பிரபு என அனைவருடனும் அவருக்கு இருந்த அந்த பிணைப்பு அபாரமானது. ரஜினியுடன் மன்னன், உழைப்பாளி என்றால் கமலுடன் இந்தியன், சிங்காரவேலன், கார்த்திக்குடன் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, லக்கிமேன், மேட்டுக்குடி, பிரபுவுடன் மை டியர் மார்த்தாண்டன், தேடினேன் வந்தது, கன்னிராசி, வியட்நாம் காலனி போன்ற படங்களில் பின்னி இருப்பார்.
இதையும் தாண்டி சத்யராஜ் - கவுண்டமணி ஜோடி மிகவும் பொருத்தமான ஜோடி. அவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய நடிகன், பிரம்மா, மாமன் மகள் படங்களில் மாறி மாறி கலாய்த்து கொள்வது இன்றளவும் பார்க்கையில் வாய்விட்டு சிரிக்க வைக்கும். ஸ்டார் நடிகர்களையே கலாய்க்கும் அளவுக்கு சுதந்திரம் பெற்றிந்தார். ரசிகர்களும் அதை ரசித்தனர். இந்த பாக்கியம் பெற்ற ஒரே நடிகர் கவுண்டமணி மட்டுமே. அவரின் கவுண்ட்டர் கொடுக்கும் திறமை ஒரு தனி கலை என்றே சொல்லலாம். அதுவே அவரை இன்று வரை நகைச்சுவை சக்கரவர்த்தி என்ற அடைமொழியுடன் கொண்டாட வைக்கிறது.
நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கம் புலி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. விரைவில் அதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கவுண்டமணியை திரையில் பார்க்க ஆவலுடன் அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.