“அவன் இவன்” படத்தில் ஐனெஸ் எனும கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் ஜி.எம் குமார் தனது முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிலோமீட்டர் கார் ஓட்டி வந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.
ஜி.எம்.குமார்
சிவாஜி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் இவர் நடித்த ஐனெஸ் கதாபாத்திரம் பரவலான கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் உணர்ச்சிவசமான கதாபாத்திரத்திலும் இப்படத்தில் அவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமன்னா நடித்து ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நினைவை இழந்த எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
காதலியைப் பார்க்க 3,500 கிமீ பயணம்
இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் ஜி.எம்.குமார் தற்போது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தனது முன்னாள் காதலியை சந்திக்க 3500 கிலோமீட்டர் தொலைவு கார் ஓட்டி அவர் வந்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதலியை சந்திக்க மெட்ராஸில் இருந்து பெங்களூரு, கோவா வழியாக மும்பை வரை சென்ற அவர், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பதிவில் ரசிகர்கள் கமெண்ட் வழியாக அவரது லவ் ஸ்டோரியை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறார்கள். மேலும் தனது காதலியுடனான புகைப்படத்தையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கெளதம் மேனன் படத்தினைப் போல் நாயகியை பார்க்க நாயகன் கடல் கடந்து செல்வது போல் தனது காதலியை ஜி.எம்.குமார் பார்த்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் சென்று வருவதாகவும், ஒவ்வொரு முறை தனது காதலியுடன் அவர் செல்வது வழக்கம் என்றும் இந்த முறை முதன்முறையாக அவரைப் பார்க்க தான் தனியாக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.