சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் என்றுமே மவுசு குறைந்ததே இல்லை. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று சுந்தரி. கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய இந்த சீரியல் அழகும் நிறமும் சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பதை மையமாக கொண்டு ஒரு பெண் பல தடைகள் சோதனைகளை கடந்து வெற்றிப் படியை அடைவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. கேப்பிரில்லா செல்லஸ், ஜிஸ்னு மோனன், ஸ்ரீ கோபிகா நீலநாத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 800 எபிசோட்களை கடந்த நிலையில் சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கியது. இரண்டாவது சீசனிலும் கேப்பிரில்லா செல்லஸ், ஜிஸ்னு மோனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் கிருஷ்ணா ரகுநந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் விறுவிறுப்பாக இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
ஏராளமான ரசிகர்களை கவர்ந்த 'சுந்தரி' சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. நல்ல வரவேற்பையும் டி.ஆர்.பி ரேட்டிங்கும் நல்ல படியாக இருக்கும் போது எதற்காக அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் சுந்தரி சீரியல் முடிவுக்கு வர உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாக வில்லை.
சன் டிவியில் பல புதிய சீரியல்களின் வருகை விரைவில் நடக்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 29ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது மல்லி என்ற புத்தம் புதிய சீரியல். அதனை தொடர்ந்து தோழி, வாரணம் ஆயிரம், புன்னகை பூவே உள்ளிட்ட மூன்று சீரியல்கள் வரும் நாட்களில் புதிதாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன. இந்த புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரமும் மற்ற தகவல்களும் இதுவரையில் வெளியாக வில்லை.
சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான சுந்தரி மற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்களை தயாரிக்கும் மிராக்கிள் மீடியா நிறுவனம் தான் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் 'தோழி' சீரியலையும் தயாரிக்க உள்ளது என கூறப்படுகிறது.
புதிய சீரியல்களின் வருகை சின்னத்திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள் முடிவுக்கு வருவது மன வருத்தத்தை கொடுக்கிறது.