தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா படம் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு சூர்யா யார்? படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.


சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி:


இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சூர்யாவின் 45வது படத்தை நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கோலிவுட் வட்டாரம் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.


காமெடி படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவை வைத்து எதுபோன்ற கதையை இயக்க உள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயத்தில் அனிருத்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஆர்.ஜே.பாலாஜியின் முந்தைய படங்களை தயாரித்த வேல்ஸ் தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:


நடிகர் சூர்யா இதற்கு முன்பு அவரை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதேபோல. பாலா இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த வணங்கான் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து முடித்துள்ளார்.


வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஏற்கனவே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாகவே தொடங்கப்படாமலே உள்ளது. இந்த சூழலிலே சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி உருவாகியுள்ளது.


எதிர்நீச்சல் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நகுல், ஜெய், விக்ரம்பிரபு ஆகியோரின் படங்களில் நடித்தவருக்கு நானும் ரவுடிதான் நல்ல திருப்பு முனையாக அமைந்தது.


ஆக்‌ஷனா? காமெடியா?


தொடர்ந்து காமெடி நடிகராக உலா வந்த இவர் முதன்முறையாக எல்.கே.ஜி. என்ற படத்தில் கதாநாயகனாக மாறினார். அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவும் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் வீட்ல விசேஷம் என்ற படத்தை சரவணனுடன் இணைந்து இயக்கினார். தற்போது சூர்யாவை வைத்த அவர் படம் இயக்க உள்ளார்.


சூர்யாவை வைத்து ஆக்‌ஷன் அல்லது காமெடி ரகம் என எந்த ரகத்தில் அவர் படம் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.