சமீப காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த தங்கம் விலை இன்றும் உச்சத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 56 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கமும் ரூபாய் 7 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது. 


தாறுமாறாக எகிறும் தங்கம் விலை:


சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று 22 காரட் கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 980க்கு விற்பனையாகியது. இன்று கிராம் ரூபாய் 20 அதிகரித்து கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது. இதனால், சவரன் தங்கம் ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 56 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது.


24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 455க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59 ஆயிரத்து 640க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் எந்த மாற்றமுமின்றி ரூபாய் 98க்கு விற்பனையாகி வருகிறது.  தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டு இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


தொடர்ந்து அதிகரிப்பு:


மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்த பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் முக்கிய நிதி அமைப்புகள் வட்டி விகிதத்தை குறைத்ததால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடுகளை செய்து வருகின்றனர்.


மேலும், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – காசா மோதல் உள்ளிட்ட போர் பதற்றம் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் என்றே வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் தங்கம் என்பது நகையாக மட்டுமின்றி சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் இருப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.