இயக்குநர், நடிகர் சசிகுமார் நடித்துள்ள படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், சசிகுமாருக்கு இந்தப் படம் கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


சசிகுமார்:


கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து, தன் முதல் படத்திலேயே ஒரு இயக்குநராக அழுத்தமாக முத்திரை பதித்தவர் இயக்குநர் சசிகுமார். நட்பு, விஸ்வாசம், துரோகம், வன்மம் என பலதரப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்து 80களின் மதுரையை கதைக்களமாகக் கொண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை அள்ளியது.


பாலிவுட்டின் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படும், ' கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ படத்தை இயக்க சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படமும் ஒரு இன்ஸ்பிரேஷன் என, இந்தப் படத்தை தன் வெவ்வேறு நேர்காணல்களில் பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் முன்னதாகப் பாராட்டியுள்ளார்.


நடிப்பில் தீவிரம்:


இயக்குநர்கள், பாலா, அமீர் இருவரது பட்டறைகளில் இருந்து உதவி இயக்குநராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய சசிகுமார், இப்படி தன் முதல் படத்திலேயே கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார். மற்றொருபுறம் ஒரு நடிகராக சக இயக்குநரும் தன் நண்பருமான சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் நடித்து கவனமீர்த்தார் சசிகுமார்.


தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தத்  தொடங்கிய சசிகுமார், தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வந்தார்.


ஹிட், ப்ளாப்:


மேலும் தன் இரண்டாவது படமான ஈசன் படத்துக்குப் பிறகு போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என இயக்கத்திலிருந்து நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிய சசிகுமார், தன் குருவான பாலாவின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு ’தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியுடன் நடித்தார். ஆனால் தொடர்ந்து நடிப்பில் ஹிட், ஃப்ளாப் என மாறி மாறி கொடுத்து பயணித்த சசிகுமார், மற்றொருபுறம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.


2009ஆம் ஆண்டு வெளியாகி கவனமீர்த்த பசங்க படம் தொடங்கி,  சில படங்களைத் தயாரித்துள்ள சசிகுமாரின் ’தலைமுறைகள்’ படத்துக்காக தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா தேசிய விருது வென்றார். 2019ஆம் ஆண்டு ’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் நண்பனாக கவனமீர்த்த சசிகுமார், ’உடன்பிறப்பே’ படத்தில் ஜோதிகாவின் சகோதரராக நடித்திருந்தார்.


கம்பேக் தந்த அயோத்தி:


இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இறங்குமுகத்திலேயே பயணித்து வந்த சசிகுமார், தற்போது வெளியாகியுள்ள அயோத்தி படம் மூலம் மீண்டும் தரமான கம்பேக் கொடுத்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


வட இந்தியாவிலிருந்து ஆன்மீகப் பயணம் வரும் குடும்பத்துக்கு மதவேறுபாடுகளைத் தாண்டி உதவி, மனிதத்தை உணர்த்தும் கதையாக அமைந்துள்ள அயோத்தி படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


இயக்குநராக இரண்டே படங்கள் மட்டுமே எடுத்து, மீண்டும் எப்போது படம் இயக்குவார் என கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சசிகுமார் நடிப்பின் மீதான ஆர்வத்தில் அதில் கவனம்செலுத்தி நடித்தும் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் சறுக்கல்களையே சந்தித்து வந்தார்.


இந்நிலையில் அயோத்தி படம் விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளி வருவதுடன், சசிகுமார் மீண்டும் தன் நடிப்பாலும் கதைத் தேர்வாலும் கவனமீர்த்து பழைய சசிகுமாராக கம்பேக் தந்துள்ளார் எனப் பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள்!