மனைவியை பிரிந்தாலும் ரஜினி மீதான பாசமும், ரசனையும் குறையாதபடி தனுஷ் பகிர்ந்த ஒரு ட்வீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 


நெல்சன் நடிப்பில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி என பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் ரிலீசை ஒட்டி இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் படத்தின் புக்கிங்குக்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த சில நாட்களாக தீவிர புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அண்மையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும், பகிரப்பட்ட போஸ்டர்களையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக லிரிக்ஸ் வீடியோவாக வெளியான ஜெயிலர் படத்தின் பாடல்கள் இணையத்தில் டிரெண்டாகி கலக்கின. 


இந்த நிலையில் ஜெயிலர் ரிலீஸூக்கு 3 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் கவுண்டவுனை தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் தனுஷ் பகிர்ந்த ஒரு ட்வீட் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது ஜெயிலர் வாரம்’ என தனுஷ் ட்வீட் செய்துள்ளார். தனுஷின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.


 






ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்திருந்த நிலையில், 18 ஆண்டுகளாக இருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தனுஷின் இரண்டு மகன்களும் ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றனர்.


எனினும், தனது மகன்களுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, தனது மகளைப் பிரிந்ததால் தனுஷ் மீது ரஜினி கோபமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஒரு ரசிகனாக, ஜெயிலர் படத்தைக் கொண்டாடும் தனுஷின் பதிவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


வாத்தி படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இது தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா2, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.