இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் நடிகர் தனுஷூம் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக  வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது.






இதுவரை 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளளார்.அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். இதனிடையே சில தினங்களுக்கு முன் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படம்  விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் விடுதலை படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் வெற்றிமாறனுக்கு தனுஷ் எவ்வளவு பேவரைட் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.