பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அறிமுகம் செய்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். நல்ல முன்னெடுப்பு என பலரும் அதை பாராட்டி வருகின்றனர். உண்மை தான், வருங்கால நம் சந்ததியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதற்காகவாவது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பையை கையில் எடுங்கள்!

சரி விசயத்திற்கு வருவோம்... என்ன தான் நல்ல விசயமாக இருந்தாலும், அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, விளம்பரம் கட்டாயமாகிறது. அப்படி தான், நேற்றைய நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், முழு பக்க அளவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் தரப்பட்டது. அதில் மஞ்சள் பையுடன் மக்கள் நடந்து செல்ல, அவர்களுடன் முதல்வர் ஸ்டாலினும் மஞ்சள் பையுடன் நடந்து செல்வார். 



எப்போதுமே ஒரு விளம்பரமோ, அறிவிப்போ வரும் போது, அதில் ஏதாவது ஒரு குறை, நிறையை தேடிப்பிடித்து அதை பிரபலப்படுத்துவது நெட்டிசன்களின் வேலை. முதல்வரின் மஞ்சள் பை விளம்பரத்திலும் அப்படி ஒரு கண்டண்ட், அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆம்... முதல்வருடன் நடந்து வருபவர்களில், அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் சிவசாமி கதாபாத்திரம் போல ஒருவர் இருப்பதை எப்படியோ பிடித்துவிட்டார்கள். வேட்டி, சட்டை, பச்சை துண்டு என்பதோடு நின்று விடாமல், ஆள் தோற்றமும் தனுஷ் போன்றே இருப்பதால், சிவசாமி போல, நெகிழியை ஒழிக்கும் வேட்டைக்கு முதல்வர் புறப்பட்டு விட்டார் என ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.லாஜிக் இல்லை என்றாலும், அவர்களுக்கு ஒரு கண்டண்ட் கிடைத்துவிட்டது. 





 

அவர்கள் கூறுவதைப் போல, அந்த விளம்பரத்தில் இருக்கும் படத்தை உற்றுப்பார்த்தால், தனுஷ் மாதிரி தான் தெரிகிறது. அப்படி பார்த்தால், அந்த விளம்பரத்தில் உள்ள ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒருவரை அடையாளப்படுத்தலாம். ஆனால் ஏன் சிவசாமியை துணைக்கு அழைத்தார்கள்? அதற்கு காரணம் இருக்கிறது. அசுரன் படம் வெளியான போது, தூத்துக்குடியில் சுற்றுப்பயணத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அந்த படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினார். அதன் பின் பஞ்சமி நிலம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தது. முதல்வர் ஸ்டாலினின் கருத்து, அதன் பின் அந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது. பலரிடம் படத்தை கொண்டு சேர்த்தது. அதன் விளைவு அசுரன், கொண்டாடப்பட்டான். 





பிற மொழியில் தயாரிக்கும் அளவிற்கு அசுரன் புகழ் பரவியது. சிவசாமியை பலரும் கொண்டாடினார்கள். அது நடந்தது என்னவோ 2019 அக்டோபர். அதன் பின் தனுஷ் பல படங்களில் நடித்துவிட்டார். ஏன்... எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கூட, இன்று முதல்வராகிவிட்டார். ஆனால், இன்னும் சிவசாமி-ஸ்டாலின் பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர மறுக்கிறது சமூக வலைதள உலகம். எது எப்படியோ... நல்ல நோக்கத்திற்கு சிவசாமியும் பயன்படட்டுமே என அதை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.