நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். ஒல்லியான தேகம், அப்பாவியான முகத்தோற்றம் என அறிமுகமான அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கிண்டலடித்தனர். அவற்றிற்கெல்லாம் பதிலடியாக தனது நடிப்பின் மூலம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவர தொடங்கினார் தனுஷ். இயக்குநரான அண்ணன் செல்வராகவன் தனுஷை பார்த்து பார்த்து பட்டை தீட்டினார்.
தனக்கென தனிபாதை அமைத்து கொண்ட தனுஷ் நடிப்பை தொடர்ந்து இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து பல பரிணாமங்களை தொட்டார். தனுஷின் வளர்ச்சி அவரை பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் நடிப்பதற்கு அழைப்பு வர காரணமாக அமைந்தது. 2 ஹாலிவுட் படங்களில் நடித்த அவர் தேசிய விருது தொடங்கி தமிழ் சினிமாவில் கிட்டதட்ட அனைத்து விருதுகளையும் பெற்று விட்டார்.
இதனிடையே கடந்தாண்டு மட்டும் தனுஷ் நடிப்பில் 4 படம் வெளியானது. ஓடிடியில் மாறன் படம் வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் படம் தனுஷின் ஹிட் பட வரிசையில் ஒன்றாக மாறியது. தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நானே வருவேன் ரிலீஸாகி, தனுஷின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் தனுஷ் மும்முரமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரை 49 படங்களில் நடித்துள்ள தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் இயக்குநர் மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மீண்டும் தனுஷ் இயக்கத்தில் இறங்கவுள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.
அதனால் 50 வது படத்தின் இயக்குநர் தனுஷ் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் துணிவு பட இயக்குநர் தனுஷூக்கு தான் கதை சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். ஒருவேளை ஹெச்.வினோத் படமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.