பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர். 90ஸ் காலகட்டம் முதல் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள தேவ் ஆனந்த் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்துள்ளார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலில் கூட தேவ் ஆனந்த் நடித்திருந்தார். 



 சித்தி :


துணை கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்த தேவுக்கு வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார். குறிப்பாக சித்தி சீரியல் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. ஏராளமான சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் நெகடிவ் கேரக்டர்கள்தான் அவரை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்தது.


மிகவும் பிஸியாக சீரியல்களில் நடித்து வந்த தேவ் ஆனந்த் திடீரென வாய்ப்பு இல்லாமல் போக 'பந்தம்' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு தென்றல் வந்து என்னை தொடும், ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கும் தேவ் இனி தொடர்ச்சியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காணலாம்.  


அஜித்துடன் நட்பு :


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தேவ் ஆனந்த் தன்னுடைய திரை பயணத்தில் அவர் சந்தித்த பல அனுபவங்கள், கசப்பான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அப்போது அஜித் சார் உடனான நட்பு  குறித்து பேசி இருந்தார். உல்லாசம் படத்தில் அஜித் நண்பனாக நடித்திருந்தேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் அதற்கு பிறகு இருவருக்கும் இடையில் நல்ல நட்பாக தொடர்ந்தது.



அவர் என்னை ஆபீஸுக்கு வர சொல்வார். இதை பார்த்த பலரும் அஜித் சாரை உங்களுக்கு தெரியுமா? என கேட்பார்கள். அது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும். அஜித் சாரிடம் நீங்கள் வாய்ப்பு கேட்கலாமே? என பலரும் கேட்டார்கள். அப்படி நான் அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றால் இதற்காகத்தான் நீ என்னுடன் பழகினாயா? என அவர் நினைத்து விட கூடாது என நானே கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டேன். 


நான் அவருடன் இருக்கும் நட்பை இழந்து விட கூடாது என நினைத்தேன். நான் அவருடன் இப்போது பேசுவது கிடையாது. அவருடன் பேசி 16 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் என்னைக்கு இருந்தாலும் என்னை பார்த்தால் பேசுவார் இல்லையா? ஐயோ இவனா வேண்டாம் என ஒதுக்கி போய் விடக்கூடாது இல்லையா? அந்த நட்பு தான் எனக்கு வேணும் என்றார் தேவ் ஆனந்த்.