தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் மாரிமுத்து (30) என்கிற கிட்டான். இவருக்கு ஷீபா என்ற மனைவியும் சாமுவேல் என்ற 5 வயது மகனும் உள்ளனர். இவர் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். மாமன்னன் மற்றும் வாழை உள்ளிட்ட படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் அடுத்து தனியாக கதை எழுதி படம் எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் லேசான நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே திரைப்பட உதவி இயக்குனர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.