மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை,  நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பல பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம் போக முடியாதவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களும் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இதனிடையே விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வேட்டையன் பட ஷூட்டிங்கிறாக திருநெல்வேலி சென்றிருந்த ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்பி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடன் தனக்கு இருந்த நட்பு குறித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இப்படியான நிலையில் விஜயகாந்த் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதில் ஒரு வீடியோவில் நடிகர் டெல்லி கணேஷ் நிகழ்வு ஒன்றை பகிர்ந்த வீடியோவும் ஒன்று. 






விஜயகாந்த் கலைப்பணி தொடர்பான பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பாபா பட ஷூட்டிங் நடக்குது. நாங்க எல்லாரும் சிவாஜி கார்டனில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது அங்க ஒரு கார் வருது. ஒருத்தர் இறங்கி அடிக்கிற மாதிரியே அதுல இருந்து இறங்கி ஒருத்தர் வர்றாரு. ரஜினி யாரு யாருன்னு கேட்டு பயந்துட்டாரு.. சத்தியமாக இந்த சம்பவம் நடந்தது. அதுவும் நிறைய வெள்ளை அம்பாசிடர் கார்களில் கூட்டமா வந்ததும் ரஜினிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. விஜயகாந்தை பார்த்ததும் தான் ரஜினிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அவரும் இவரும் வரவேற்று கொண்டனர். உடனே விஜயகாந்த், ‘கலை நிகழ்ச்சிகள் நடத்த சிங்கப்பூர், மலேசியா போறோம். நீங்க வர்றீங்க.. கமல் வர்றதா சொல்லிட்டாரு’ என சொன்னார். அதற்கு ரஜினியும் அப்ப நானும் வர்றேன் சொன்னாரு. இதுல வேடிக்கை என்னன்னா, ‘விஜயகாந்த் ஒரு தடவை தான் வாங்க என சொன்னார். ரஜினி 100 தடவை வர்றேன்னு சொன்னாரு’ என டெல்லி கணேஷ் அந்த நிகழ்வில் தெரிவித்திருப்பார். 


டெல்லி கணேஷ் சொன்ன அந்த கலை நிகழ்ச்சிக்காக செல்லும்போது ரஜினி, கமல் இருவரும் விஜயகாந்த் நெகிழும் வண்ணம் சக நடிகர், நடிகைகள் சென்ற விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் செல்லாமல், எகானமிக் கிளாஸ் டிக்கெட்டில் பயணப்பட்டு இருப்பார்கள் என்பதையும், அதனை நேர்காணல்களில் பலரும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.