டேனியல் பாலாஜி


நடிகர் டேனியல் பாலாஜி நேற்று முன் தினம் (மார்ச்.29) இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த டேனியல் பாலாஜி, தனித்துவமான ஒரு நடிகராக பெயர் வாங்கியவர். தொடர்ந்து அவரை நிறையப் படங்களில் எதிர்பார்த்து வந்த ரசிகர்களை அவரது இறப்பு மனம் வருந்தச் செய்துள்ளது.


ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தனது இயல்பான பிறருக்கு உதவும் பண்புகளுக்காக ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறார் டேனியல் பாலாஜி. திரைப்படக் கல்லூரியில் படித்து வில்லனாக நடிக்க வேண்டும் என்பதையே தனது குறிக்கோளாக கொண்டிருந்துள்ளார்.


சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தபோது பல்வேறு இளம் நடிகர்கள், இயக்குநர்களுக்கு ஊக்கமளித்தும் சிபாரிசு செய்தும் உள்ளார். நடிகர் சந்தீப் கிஷன், இயக்குநர் ஹலிதா ஷமீம், மோகன் ராஜா உள்ளிட்ட பலர் டேனியல் பாலாஜி தங்களுக்கு உதவியதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்கள். அப்படிப்பட்ட டேனியல் பாலாஜி தனது சொந்த அண்ணன்  நடிகர் முரளியிடம் இருந்து சிபாரிசு பெற மறுத்த காரணத்தை பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.


சிபாரிசு கேட்காததற்கு இதுதான் காரணம்


டேனியல் பாலாஜியின் அம்மாவும் மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் சகோதரிகள் என்பதால் நடிகர் முரளி டேனியல் பாலாஜிக்கு மூத்த அண்ணன் ஆவார். தனது அண்ணனிடம் சிபாரிசு கேட்காததன் காரணமாக டேனியில் பாலாஜி கூறியயுள்ளதாவது “நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும்போதே என் அண்ணன் முரளி நடிகராகி விட்டார். திரைப்படக் கல்லூரியில் நான் படிக்கும்போது அவர் மிகப்பெரிய நடிகர். ஆனால் நான் அவரை அடிக்கடி சென்று பார்க்க மாட்டேன்.


சிபாரிசுக்காக நான் அவரைப் பார்த்ததாக யாராவது சொல்லிவிடுவார்கள் என்பதால் அவரைச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்தேன். திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்தபின் முரளி அண்ணன் என்னை ஒருமுறை அழைத்தார். நானும் அவரும் சின்ன வயதில் சேர்ந்து நிறைய விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்போது அவர் என்னை எப்படி வரவேற்பார் என்று யோசித்தபடியே அவரைப் பார்க்க சென்றேன்.


ஆனால் அவர் என்னை எப்போதும் போலவே வரவேற்றார். முரளி அண்ணனின் நடிப்பை நான் நிறைய கிண்டல் அடிப்பேன். வில்லனாக தான் நடிக்க வேண்டுமா என்று அவர் என்னிடம் கேட்பார். “ஹீரோவாக  நடிக்கதான் நீங்க இருக்கீங்களே!” என்று நான் பதில் சொல்வேன். முரளியின் அப்பா ஒரு பெரிய் இயக்குநர். கன்னடத்தில் நிறைய படங்களில் வேலை செய்து வந்தார். என்னை வைத்து இயக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தது. அதனால் ஒரு சில கன்னட படங்களில் நடித்தேன்“ எனப் பேசியுள்ளார்.


இந்நிலையில் இந்தத் தகவலைப் பகிர்ந்து அவரது ரசிகர்கள் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.