காதல் மற்றும் ஆக்சன் டிராமா ஜானரில் கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி (Nani) நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி கலெக்ஷன் அள்ளிய திரைப்படம் ‘தசரா’.
தசரா கூட்டணி
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இப்படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பாடு பான் இந்திய படமாக வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கதைரீதியாக அனைத்து தரப்பினரையும் பூர்த்தி செய்யாவிட்டாலும், கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடிக்க, நடிகர் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா உருவெடுத்தது. இந்த நிலையில், தசரா திரைப்படத்தின் கூட்டணி சூப்பர் அப்டேட் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளது.
அடுத்த பட மாஸ் அப்டேட்
அதன்படி தசரா வரிசையில் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ‘நானி 33’ என அறிவிக்கப்பட்டுள்ள படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களுக்கு முதற்கட்டமாக போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து படக்குழு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவப்பு நிற மாஸான போஸ்டரின் பின்னணியில் நானி இடம்பெற்றிருக்கும் நிலையில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகமும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
தசரா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு கடந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தசரா திரைப்படத்தின் போஸ்டர்களும் இதே போல் எதிர்பார்ப்பைக் கிளறிய நிலையில் இப்படமும் அதே பாணியில் காதல் , ஆக்ஷன் நிறைய இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகிறார்கள். மேலும் 2025ஆம் ஆண்டு பான் இந்திய திரைப்படமாக கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Daniel Balaji: நான் ரசிக்கும் கலைஞன்.. டேனியல் பாலாஜி நடிப்பைப் பார்ந்து மெய்மறந்து சேரன் செய்த செயல்!
Daniel Balaji: "கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை” - மனமுடைந்த பேசிய பத்து தல இயக்குநர்!