நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை முன்னிட்டு நடிகர் கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 









முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என  கூறப்பட்டது.அந்த வகையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சி நடத்த சிம்புவின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். 



மேலும் நடிகைகள் ராதிகா,ராஷிகண்ணா,  நடிகர்கள் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். வந்திருந்த ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் படம் ரிலீசாகும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், இதனை நான் மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் கேட்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.