கவுண்டமணி


எத்தனை தலைமுறை கடந்தாலும் காமெடி கிங் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரர் கவுண்டமனி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. டைமிங் காமெடிகளில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் கவுண்டமணி. 


20 ஆண்டுகள் சட்டப்போராட்டம்


நடிகர் கவுண்டமணி கடந்த 1996 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்  நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். 5 கிரவுண்ட் மற்றும் 454 சதுர அடி பரப்பளவுள்ள இந்த நிலத்தில் 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். இதற்காக தனியார் நிறுவனத்தோடு அவர் ஒப்பந்தம் செய்திருந்தார். 15 மாதங்களில் இந்த கட்டிடத்தை கட்டித் தரப்படும் என்றும் இதற்காக 3.58 கோடி ஒப்பந்ததாரர் கட்டணமும் போடப்பட்டது. 


1996 முதல் 1999 ஆம் ஆண்டு வரை கவுண்டமணி தரப்பில் இருந்து ரூ 1.4 கோடி கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததால் கவுண்டமணி சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் கவுண்டமணி செலுத்திய 1.4 கோடி ரூபாயில் 46.51 லட்சத்திற்கு மட்டுமே கட்டுமாணப் பணிகள் முடிந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்தார். கட்டுமானப் பணிகளையும் கவுண்டமணி செலுத்திய முன்பணத்தையும் ஒப்பிடுகையில் 65 லட்சம் பணம் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி கவுண்டமணிக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனம் மீண்டும் அவரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.


ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிபடுத்தினார்கள். இந்த தீர்ப்பை திரும்ப பெற கோரி தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த  ஜே. பி பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தனியார் நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு கவுண்டமணிக்கு சொந்தமான 5 கிரவுண்டு நிலத்தை அவருக்கு திரும்ப ஒப்படைக்கச் சொல்லி இறுதி தீர்ப்பு வழங்கியது. 


கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வந்த இந்த சட்டப் போராட்டம் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து நடிகர் கவுண்டமணி தனக்கு சொந்தமான நிலத்தின் சாவியை திரும்பபெற்றுள்ளது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலத்தின் தற்போதை மதிப்பு ரூ 50 கோடியாகும்