விடுதலை படத்தில் நடித்ததால் என்ன மாதிரியாக கருத்துகள் வந்தது என நடிகர் சேத்தன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வெற்றிமாறனின் “விடுதலை”
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள விடுதலை படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
முன்னதாக விடுதலை படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படமானது 2 பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
இதனிடையே விடுதலை படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றுள்ளது. குறிப்பாக நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ஓசி (Officer In charge) என்னும் கேரக்டரில் நடிகர் சேத்தன் நடித்திருந்தார். சர்வாதிகார போலீசாக தனக்கு கீழே உள்ள சக காவல்துறையைச் சேர்ந்தவர்களை மதிக்காத அவரது கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டிய நடிகர் சேத்தன்
இதுதொடர்பாக விடுதலை படத்தில் நடித்தது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் சேத்தன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “ எனக்கு நெகட்டிவ் கேரக்டர்கள் பண்ண பிடிக்கும். அதன்மூலம் ரொம்ப எளிதாக ரசிகர்களிடம் ரீச் ஆகும். அதுவும் வெற்றி மாதிரி இயக்குநர்களின் படங்களில் பண்ண கேட்கவா வேண்டும்.
முதலில் சூரி தான் படத்தின் ஹீரோ தான் என்ன சொன்னபோது இந்த மாதிரி யாரு ரிஸ்க் எடுப்பா என்று தான் தோன்றியது. ஆரம்பத்தில் சூரி இந்த கேரக்டரில் பொருந்த கஷ்டப்பட்டது நடந்திருக்கலாம். நான் டப்பிங்ல சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். மேக்கிங்கில் பார்த்தால் தெரியும் சூரிக்கு பயங்கரமாக அடிபட்டு விட்டது. கையில் தோல் கிழிந்து காயம் ஏற்பட்டு விட்டது. உடனே கீழே போய் தையல் போட்டு விட்டு மீண்டும் நடிக்க வந்து விட்டார். சிறுமலை மலைப்பகுதியில் ஷூட்டிங் என்றாலே பயம் தான். அப்படியான கரடுமுடனான பாதை உள்ளிட்ட பல சிரமங்கள் அங்கு இருந்தது.
பொல்லாதவன் படத்தில் தான் முதன்முதலாக நடித்தேன். அதன்பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து வெற்றிமாறன் என்னை அழைத்தார். 2 ஆண்டுகள் பயணம் இப்ப படம் ரிலீசாகிருக்கு. படம் பார்த்துட்டு ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் உங்களை மதிக்கிறேன். ஆனால் காசுக்காக இப்படியான கேரக்டர்களை பண்ணாதீர்கள்” என தெரிவித்தார்.
படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. வெற்றிமாறனின் எல்லா படங்களிலும் எந்த காட்சியாக இருந்தாலும் இயற்கையாகவே இருக்கும். அவருக்கு ஒரு காட்சி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது தெரியும். நாம் அதிகமாக பண்ணிவிட்டால் அவ்வளவு வேண்டாம் என சொல்வார். படத்தில் வரும் நிர்வாண காட்சியை படமாக்கப்படும் போது கோபம், வன்மம், காமம் என அனைத்தும் கலந்த அந்த எமோஷன்களை உடல்மொழியில் கொண்டு வர வேண்டுமென்பதை வெற்றிமாறன் சொல்லி தான் நடித்தேன்.
அவரோட படத்துல நடிக்க முன்னணி நடிகர்கள் கூட வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நாங்க என்னதான் பேசிக் கொண்டாலும் 13 ஆண்டுகள் கழித்து தான் இந்த படத்தில் நடித்துள்ளேன். என்னோட கேரக்டர் நல்லா வந்துருக்குன்னு சொல்றப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது. விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும்” என சேத்தன் கூறியுள்ளார்.