பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார், உணர்வுப்பூர்வமாக மண் மணம் மாறாமல் 90களில் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து என பல படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.
இதனிடையே தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் ஹீரோவாக அறிமுகமான சேரனுக்கு ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்கள் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தான் இயக்கிய படங்களிலும், பிற இயக்குநர்களின் படங்களிலும் சேரன் நடித்து வந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் கடைசியாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்தப்படமாக “தமிழ்க்குடிமகன்” விரைவில் வெளியாக உள்ளது.
இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படமானது சாதிய பாகுபாடுகளால் அவமானப்படும் சமூகத்தை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் கூட பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா 2.0 என்ற வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடிக்க சேரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த பதிவில், “இன்னிக்கு ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருந்தேன்... சிலர் நடிக்கிறத பாத்துட்டு இருந்தேன்... அப்போ உங்க ஞாபகம் வந்துச்சு .. We miss you sir.. இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு” என தெரிவித்துள்ளார்.