பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனைப் படைத்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கலை கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை, விளையாட்டு, கல்வியியல் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு கலை கலாச்சாரப் பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா ஒருவருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் இருந்து 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
குடியரசு தினத்திற்கு முந்தைய வாரம் இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் ஹாலில் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் 11 குழந்தைகளுக்கும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
இதனைத் தொடர்ந்து விருதுகளை பெற்ற 11 பேருடனும் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாயும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு கௌரவம்
இதனிடையே நேற்றைய தினம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த தினம் பராக்ரம் திவாஸ் தினமாக கொண்டாட்டப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது வலிமையை வெளிப்படுத்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதினை பெற்ற 21 வீரர்களின் பெயர்களை அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பெயரில்லா 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி சூட்டினார்.
இது நாட்டின் நிஜ ஹீரோக்களின் பெயர்களை தீவுகளுக்கு வைப்பது இராணுவ வீரர்களின் பங்களிப்பினை போற்றும் விதமாகவும் என்றும் நிலைத்திருக்கும் எனவும் இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.