எஸ்.கே 23


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. தற்போது எஸ்.கே முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. 


எஸ்.கே 23 படக்குழு


சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் தவிர்த்து இப்படத்தில் அடுத்தடுத்த நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியானபடி இருக்கின்றன. முன்னதாக இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து வித்யுத் ஜம்வால் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது இப்படத்தில் மலையாள நடிகர் பிஜூ மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் பிஜூ மேனன் தமிழில் மஜா, ஜூன், தம்பி, அகரம், பழநி, அரசாங்கம், அலிபாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக 2010ஆம் ஆண்டு போர்க்களம் படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் நடிப்பதற்கான சூழல் கைகூடி வரவில்லை


மலையாளத்தில் பிஜூ மேனன் மற்றும் பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் தமிழ் ரசிகர்கள் இவரது கதாபாத்திரத்தை ரொம்பவும் ரசித்தார்கள். தற்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகைத் தர இருக்கிறார் பிஜூ மேனன்.






இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிஜூ மேனன் சிவகார்த்திகேயன், முருகதாஸ் படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்திற்காக கிட்டதட்ட ஓராண்டு காலத்திற்கான கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்கள் , வில்லன் ரோல் என எல்லா கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடிக்கக் கூடிய பிஜூ மேனன் இந்தப் படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் வர இருக்கிறார் என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!  




மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!