தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் அதிகளவில் மண்பானைகளை வாங்கி வருகின்றனர். இதனால் மண்பானை விற்பனை மும்முரமாக நடப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கத்திரி வெயிலுக்கு முன்பே வாட்டுது வெயில்


தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி மக்களை வாட்டி வருகிறது. வெயிலும் தினமும் தன்னுடைய கோரமுகத்தை காட்டுவதாலும் வெப்ப அலை வீசும் என்ற எச்சரிக்கையாலும் மக்கள் மதிய நேரத்தில் வெளியில் நடமாடுவதே இல்லை. இந்நிலையில் வரும் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய உச்ச கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. கும்பகோணத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.


வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு


பகலில் இப்படி என்றால் இரவில் வீட்டிற்குள் எத்தனை மின்விசிறிகள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பழச்சாறு, நுங்கு, பதநீர் உள்ளிட்டவை அருந்தி செல்கின்றனர். காலை நேரங்களில் கம்பு, சோளம், ராகி கூல் கடைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அந்த நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.


பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் நீர் மோர் கொடுக்கப்பட்டு வருகிறது. பழக்கடைகளில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.


மண்பானை தண்ணீரின் ஆரோக்கியம்


பலவகையான பழங்கள் ஜூஸ் வாங்கி சாப்பிட்டாலும் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாத ஒன்று. அதே போல் தாகமும் தீர்க்கும் என்பதால் கோடை காலத்தில் மண்பானையின் பயன்பாடு அதிகமாக இருக்கும். மண்பானையில் வைக்கப்படும் தண்ணீர் இயற்கை முறையில் குளிர்ந்த நீராக மாறுகிறது. இதனால் மண்பானை தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. 


மண் சட்டியில் நடந்த சமையல்


இந்த கோடையில் மண்பானை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது மண்பானை விற்பனை எப்படி இருக்குமோ? அதே போல் தற்போது கோடை காலத்திலும் மண்பானை விற்பனை அதிகளவில் உள்ளது. முன்பு எல்லாம் கிராமங்களில் மண் சட்டியில் சமையல் செய்து சாப்பிட்டு, மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அதை குடித்து வந்தனர். தற்போது வேலைப்பளுவின் காரணமாக கிராமங்களில் கூட அதிக அளவில் பிரிட்ஜ் பயன்படுத்துவோர் அதிகரித்து, மண்பானைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.


மண்பானைகளை தேடி வாங்கும் மக்கள்


கும்பகோணத்தில், சுவாமிமலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்பானை வைத்து விற்பனை நடந்து வருகிறது. மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல், ரூ.700 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.


பொதுமக்களிடம் இருந்து மண்பானைகளுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விற்பனையும் நன்றாக உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருமானமும் திருப்திகரமாக உள்ளது.