திருநெல்வேலி பேமஸ்:


பண்டைய காலம் தொட்டு நம் முன்னோர்கள் உணவு முறையில் ருசியாக சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் பச்சையாக காய்கறிகளை சாப்பிட்டு வந்த மனிதன் பின்பு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு அதன் சுவையை அறிந்த பின்னர் படிப்படியாக சுவையாக சமைத்து சாப்பிடவும் ஆரம்பித்தான். இப்படி சுவைபட சாப்பிட மனிதன் தன் நாவிற்கும் தான் வாழுகின்ற சூழலுக்கும் ஏற்ப உணவு முறைகளை ருசியாக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அந்த வகையில் இன்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகையான ருசியான பிரபல்யமான உணவு வகைகள் அமைந்திருக்கின்றன. அப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் சுவையான உணவு பொருளாக அல்வா முதலிடத்தையும் அதன் பின்பு திருநெல்வேலி அவியல் அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட சுவையான திருநெல்வேலி அவியல் செய்முறை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். 


சைவ பிரியர்களுக்கான ரெசிப்பி:


கேரளா ஸ்டைலில் அவியல் நிறைய பேர் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் திருநெல்வேலி அவியல் அதிகம் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். இந்த அவியல் திருநெல்வேலி வட்டாரத்திற்கே உரியது. திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த சுப துக்க நிகழ்ச்சி வீடுகளிலும் உணவு வகையில் இந்த அவியல் முதல் இடத்தை பெறுகிறது. உணவு உபசரிப்பு என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் உணவு உபசரிப்பில் தலை வாழை இலையில் காய்கறி வகையில் முதல் இடத்தை பிடிப்பதும் இந்த அவியல் தான். இந்த அவியலை சாம்பார் மற்றும் ரச சாதத்திற்கும், அடை தோசைக்கு தொடுகறியாக வைத்தும் சாப்பிடுவது வழக்கம். தேங்காய் எண்ணெயில் செய்யும் இந்த அவியலுக்கு சைவ பிரியர்கள் அடிமை. வாருங்கள் இப்போது இந்த திருநெல்வேலி வட்டார அவியல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:


கேரட், பீன்ஸ், கொத்தவரை, முருங்கைக்காய், கத்தரிக்காய், மாங்காய் , சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், வாழைக்காய், வெள்ளை பூசணி, தேங்காய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சீரகம்  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமைக்கப்படுவது தான் இந்த திருநெல்வேலி அவியல். 


 




செய்முறை:


எல்லா வகையான காய்களையும் ஆவியில் வேகவைத்து அவித்து சமைப்பதனால் இது அவியல் என பெயர் பெற்றது. வேலைக்குரிய காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள தேங்காய், பச்சை மிளகாய் , சீரகம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளைப்போட்டு தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றி காய்ந்து வெந்து வரும்போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து சரிபார்த்து இறக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அவியலில் சேர்க்கவும். அவியல் மிகவும் கெட்டியாகவும் குறைவாகவும் தேங்காய் கலவை சேர்ந்து வெளிப் பச்சை நிறத்தில் காணப்படும். 




தேங்காய் எண்ணெய் கம கமக்க இந்த சுவையான திருநெல்வேலி அவியலை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். சுட சுட இந்த அவியலை சாம்பார் மற்றும் ரச சாதத்துடன் வாழையிலேயே பரிமாறி சாப்பிடுவது தேவாமிருதமாக இருக்கும் என்றால் மிகையல்ல. நீங்களும் திருநெல்வேலி அவியலை சமைத்து உண்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரண்ட்ஸ்....!