அட்டகத்தி, கபாலி படங்களுக்கு பிறகு நடிகர் தினேஷ் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான படம் ‘அட்டகத்தி’ . இந்த படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் தினேஷ் பின்னால் ஒட்டிக்கொண்டது. அவர் இன்று ‘அட்டக்கத்தி தினேஷ்’ ஆகவே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 


தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து வந்த தினேஷ், மீண்டும் பா.ரஞ்சித் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கபாலி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், குக்கூ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. ஒருநாள் கூத்து என வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளார். 


ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வேடம் ஏற்கும் தினேஷ் தற்போது, ஜே பேபி, தண்டாகாரன்யம், படங்களில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் கருப்பு பல்ஸர்,  லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தினேஷ் தற்போது மீண்டும் இயக்குநர் பா ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார்.   இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


அதேசமயம் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என தன் படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனியிடம் பிடித்த பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சார்பட்டா படத்தின் 2 ஆம் பாகமும் விரைவில் உருவாரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் அட்டகத்தி தினேஷ் மீண்டும் இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் இப்போதே பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: குணசேகரனின் அடுத்த மாஸ்டர் பிளான்..எல்லாமே நடிப்புதானா? ரசிகர்களுக்கு ஷாக்?


நினைச்சா, எப்ப வேணும்னாலும், யாரு வேணும்னாலும் படிக்கலாம்.. பாக்கியலட்சுமியில் இன்று