மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி சினிமாவில் அறிமுகமான பாணா காத்தாடி படம் இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அதர்வா முரளியின் முதல் படம்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகம் என்பது காலம் தொட்டு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா, பாணா காத்தாடி மூலம் நடிகராக அறிமுகமானார். பத்ரி வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் சமந்தா, பிரசன்னா, மௌனிகா, கருணாஸ், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் முரளியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பிளஸ் 2 மாணவரான அதர்வாவும், அவரது நண்பர்களுக்கும் பட்டம் விடுவதே வேலை. அப்படி ஒருநாள் அறுந்துபோன காத்தாடியை பிடிக்க சென்று சமந்தா மீது மோதுகிறார். அப்போது சமந்தாவின் பென் டிரைவ் அதர்வாவிடம் சென்று விடுகிறது. இதனால் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. ஆனால் காதலை சொல்ல போன இடத்தில் பிரச்சினை, தான் வசிக்கும் பகுதியில் ரவுடி பிரசன்னா செய்த கொலையை பார்த்ததால் பிரச்சினை என அனைத்திலும் சிக்கிக் கொள்ளும் அதர்வாவின் நிலை என்ன என்பதே இப்படத்தின் கதையாகும். சினிமா வரலாற்றில் குஜராத்தின் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் எடுக்கப்பட்ட முதல் படம் இதுவாகும்.
வரவேற்பை பெற்ற பாடல்கள்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்த சத்யஜோதி நிறுவனம், இப்படத்தை தயாரித்த நிலையில் பாணா காத்தாடிக்கு மிகப்பெரிய பலமாக யுவனின் பாடல்கள் அமைந்தது. தாக்குதே கண் தாக்காதே, ஒரு பைத்தியம் பிடிக்குது, என் நெஞ்சில் ஆகிய பாடல்கள் இன்று ரசிக்கும்படி இருக்கும்.
பாணா காத்தாடி படம் அதர்வாவுக்கும், சமந்தாவுக்கு மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். முதலில் இப்படத்திற்கு 'மாஞ்சா' என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அருண்விஜய் நடிப்பில் 'மாஞ்சா வேலு' என்ற படம் வெளியானதால் பின்னர் பாணா காத்தாடி என மாற்றம் செய்யப்பட்டது.
முரளியின் கடைசிப்படம்
மகனை நடிகனாக அறிமுகம் செய்ய நினைத்த நடிகர் முரளிக்கு இப்படமே கடைசிப்படமாக இருந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் ‘இதயம்’ முரளி என்னும் கேரக்டரில் வந்திருப்பார். ஆனால் படம் ரிலீசாகும் முன்பே முரளி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேலும் படிக்க: மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணாதீங்க.. டிவியில் இன்றைய படங்கள் இதோ..!
‘நல்லாருக்கு உங்க நியாயம்’: தொடங்கியது ஜெயிலர் பட டிக்கெட் முன்பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்..!