ஜெயிலர் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தியேட்டர்கள் நடைமுறையால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். 


ஜெயிலர் படம் 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 


படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு 


முன்னதாக ஜெயிலர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 






தொடங்கிய டிக்கெட் முன்பதிவு


இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு படத்துக்கு நள்ளிரவு 1 மணி காட்சிகள் வழங்கப்பட்டது. அதற்கான கொண்டாட்டங்களின் போது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாக அதன்பிறகு வெளியான எந்த படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாலை 4, 5 மணி காட்சிகள் இல்லாதது வார நாட்களில் வேலை செல்பவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. 


இப்படியான நிலையில்,  ஜெயிலர் படத்தின் முன்பதிவு நேற்று இரவு ஆரம்பமானது. முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிக்கெட் முன்பதிவு  தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. மேலும் முன்பதிவு இணைய தளங்களும் முடங்கியது. இதற்கிடையில் தியேட்டர்கள் மொத்த இருக்கைகளில் பாதி இருக்கையை முன்பதிவு செய்ய முடியாத மாதிரி முடக்கி விட்டு, மீதமுள்ள இருக்கையை ஆன்லைன் மூலம் புக் செய்யலாம் என தெரிவித்ததாக பலரும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டினர். 


மேலும் படத்திற்கான டிக்கெட் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.120க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ரூ.190 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மீத நாட்களில் காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்திற்கான காட்சிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு வைத்து விட்டு, எப்படி இரண்டாம் நாள் காட்சி காலை 6 மணிக்கு தொடங்குகிறீர்கள். இது எப்படி சாத்தியம் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.