நடிகர் சரத்குமார் தன்னை சில நேரங்களில் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விடுவார் என நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார். 


போர் தொழில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா


E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'போர் தொழில்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காவல்துறையில் எதிரும், புதிருமாக இருக்கும் அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் எப்படி ஒரு மர்ம கொலைக்கான முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். 


போர் தொழில் படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது இன்று நடைபெற்றது.  இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். 


குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய சரத்குமார்


 இதில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “நானும் இயக்குநரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். இந்த படத்தின் ஐடியாவை 2015 ஆம் ஆண்டே விவாதித்துள்ளோம். தமிழ் சினிமாவில் நிறைய கிரைம் த்ரில்லர் படங்கள் வந்துருக்கு. ஆனால் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள 2 கேரக்டர்கள் ரொம்ப விறுவிறுப்பா வந்துருக்கு. தமிழ் சினிமா போலீஸ் கேரக்டர்கள் என்றால் மீசையை முறுக்கி கொண்டு வருவது போல இருக்கும். எனக்கும் அதே மாதிரி நடிக்கணும் என ஆசையாகவே உள்ளது. 


அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என நினைப்பவராக என்னுடைய கேரக்டர் இருக்கு. அதற்கு அப்படியே நேரெதிராக சரத்குமாரின் கேரக்டர் இருக்கும்.  புதிதாக வேலைக்கு வந்த காவலரும், அனுபவம் வாய்ந்த காவலரும் எப்படி இணைகிறார்கள், எப்படி இந்த படத்தில் நடக்கும் கொலைக்கான  திருப்பு முனையை கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.


சரத்குமாருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அவர் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதற்கு முன்னால் சினிமாவில் அனுபவம் வாய்ந்த நாசருடன் நடித்திருந்தேன். அது மிகவும் அழகாக இருந்தது. அதன்பிறகு சரத்குமாருடன் நடித்துள்ளேன். என்னுடைய சினிமா பயணம் நேற்று தான் ஆரம்பித்தது போல இருந்தது. இந்த நேரத்தில் சரத்குமார் போன்ற இருவருடன் பயணிப்பது வேற லெவலாக இருக்கும். 


ஒரு மனிதராக அவர் வேற மாதிரி. சில நேரங்களில் என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விடுவார். படப்பிடிப்பு நேரத்தில் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவரை பார்க்க கட்சியில் இருந்து வருவார்கள். ஆனால் நானோ எதுவும் செய்யாமல் போனில் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர் செய்வது எல்லாம் நீ என்னடா பண்ணிட்டு இருக்க என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பி விடும். அவருடன் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது.  


நிகிலா விமல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பலப்பேர் என்னிடம் தெகிடி மாதிரி இன்னொரு படம் அல்லது அதன் 2ஆம் பாகம் மாதிரி நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கான கதையாக இப்படம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.