நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் மீண்டும் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் “ரெட்ட தல”. இந்த படத்தை திருக்குமரன் இயக்குகிறார். மான் கராத்தே மற்றும் கெத்து படங்களை இயக்கிய அவர் பல வருடங்களுக்கு பிறகு ரெட்ட தல படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இப்படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கிறார். சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இயக்கும் ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தடம் படத்துக்குப் பின் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இதில் ஒரு அருண் விஜய்யின் கழுத்தை இன்னொரு அருண் விஜய் பிடித்திருப்பது போன்று இருக்கிறது.
இதனிடையே ரெட்ட தல படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் அருண் விஜய், “நாங்க எல்லாரும் “ரெட்ட தல” டைட்டில் கேட்டதும் ரொம்ப ஆச்சரியப்பட்டோம். தல என்பது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை தான். இந்த டைட்டிலுக்கு ஏற்றவாறு இரண்டு கேரக்டர்களுக்கும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இது எனக்கு ஒரு சவாலான விஷயம் தான். இந்த படத்துக்கான போட்டோஷூட்லேயே எனக்கு இயக்குநர் திருக்குமரனின் உழைப்பு என்ன மாதிரியானது என்பது தெரிந்தது. ஏப்ரல் 29 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறோம். ஏ.ஆர்.முருகதாஸ் 10 வருடம் இந்த டைட்டிலை வைத்திருந்தார். அவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக டைட்டிலை பெற்றுள்ளோம். அதற்கேற்ற நியாயத்தை சேர்ப்போம்” என நடிகர் அருண் விஜய் கூறினார்.
நடப்பாண்டில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் அருண் விஜய் நடித்தார். இப்படம் கடந்த பொங்கலன்று திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரெட்ட தல படமும் இந்தாண்டே வெளியாகும் என்பதால் அருண் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீபிள் ட்ரீட் காத்திருக்கிறது.