Lok Sabha Election 2024: எனது தாய் இந்த நாட்டிற்காக தனது தாலியையே தியாகம் செய்தவர் என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.


பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி:


சொத்து மறுஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாகக் குறிப்பிட்டு, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்த நாட்டில் தற்போது என்ன பேச்சுகள் நிலவுகின்றன? இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று பேச்சு வந்தது. இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, உங்கள் தங்கத்தையோ அல்லது தாலியையோ காங்கிரஸ் பறித்ததா?” என கேள்வி எழுப்பினார்.






”எனது தாயின் தியாகம்”


தொடர்ந்து பேசுகையில், "போர் நடந்தபோது எனது பாட்டி ​​இந்திரா காந்தி தனது தாலியையும், தங்கத்தையும் நன்கொடையாக அளித்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது," என்று தனது தந்தையும்,  மறைந்த பிரதமருமான ராஜீவ் காந்தியின் படுகொலையை பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். அதோடு,  "இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தாலியை தியாகம் செய்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய தாலியை அடமானம் வைக்க நேரிட்டபோது, ​​பிரதமர் எங்கே இருந்தார்? விவசாயிகள் 600 பேர் தற்கொலை செய்துகொண்டபோது, ​அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பற்றி அவர் நினைத்தாரா? இன்று பெண்களை ஓட்டுக்காக பயமுறுத்துகிறீர்களா? நரேந்திர மோடி தாலியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருந்தால், அவர் இதுபோன்ற நெறிமுறையற்ற விஷயங்களைப் பேசியிருக்க மாட்டார்" என்றும் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார்.


மோடியின் குற்றச்சாட்டுகள்: 


அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், சொத்து மறுஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி பேசினார். அந்த உரையில், “மக்கள் கடினமாக உழைத்து  சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை "ஊடுருவுபவர்களுக்கு" மற்றும் "அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு" காங்கிரஸ் மறுவிநியோகம் செய்யும்” என்று மோடி சாடினார். மேலும், பரப்புரை உரையில் சிறுபான்மை சமூகத்தினரான இஸ்லாமியர்களை குறிப்பிட்டதோடு,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கம் மற்றும் தாலி கூட திருடப்படும் என்று மோடி குற்றம்சாட்டினார். இந்நிலையில் தான் தனது தாய்நாட்டிற்காக தனது தாலியையே தியாகம் செய்தார் என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.