மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் என்னுடைய மருமகன் உமாபதிக்கு இருக்கிறது என நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது. இது இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகும். இவர்களின் திருமண வரவேற்பு ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனிடையே நேற்று புதுமண தம்பதியினர், அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன், “மகளை திருமணம் செய்து கொடுத்தப்பிறகு ஒரு அப்பாவாக, மாமனாராக உங்கள் முன்னாள் நிற்கிறேன். ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. நானும் தம்பி ராமையாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். ஆனால் என்னைக்கு அவர் எனக்கு சம்மந்தி ஆவார் என நாங்கள் நினைக்கவில்லை. தம்பி ராமையா குடும்பம் ஒரு அற்புதமானது. பண்பாடு உள்ள குடும்பம். என்ன பேசினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அவரும் அவருடைய மனைவி சாந்தியும் ரொம்ப இனிமையானவர்கள். இப்படிப்பட்ட குடும்பத்தினருக்கு என்னுடைய மகள் மருமகளாக செல்வதில் மிகுந்த சந்தோசம்.
அதேபோல் மருமகன் உமாபதியுடனான சந்திப்பு வித்தியாசமானது. நான் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதில் ஒருவராக பங்கேற்றார். என்னமோ தெரியல. அங்கிருந்தவர்களில் ரொம்ப பிடித்தது உமாபதியை தான். அவரின் எளிமை, எனர்ஜி, வெகுளித்தனமான கேரக்டர் தான். இவர்கள் காதலிப்பார்கள் என்று அப்போதெல்லாம் தெரியாது. அவர் ரொம்ப திறமையானவர். மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் உமாபதிக்கு இருக்கு. அவர் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். என்னுடைய மருமகன் என்பதற்காக சொல்லவில்லை” என கூறினார்.
தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, “எங்கள் குடும்பத்திற்கு மருமகளாக ஐஸ்வர்யா வந்தாலும், அவர் எங்களுக்கு மகள்தான் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மருமகளிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும்” என தெரிவித்திருப்பதாக சொன்னார்.