அர்ஜூன் மகள் திருமணம்
ஆக்ஷன் மிங் அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது. அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவல் தொடரில் பழக்கம் ஏற்பட்டு ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , நயந்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். நிகழ்வைத் தொடர்ந்து நடிகர் அர்ஜூன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில் அவர் தனது மகள் திருமணம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதே நேரத்தில் தற்போது தான் நடித்து வரும் விடாமுயற்சி படத்தைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.
மீண்டும் தொடங்கியது விடாமுயற்சி படப்பிடிப்பு
பாதியில் நிறுத்தபட்ட விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளதாகவும் இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் நிச்சயம் வெளியாகும் என்றும் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அஜித் , அர்ஜூன் , த்ரிஷா, ஆரவ் , ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. கடந்த ஆண்டு முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து படம் குறித்த அடுத்தகட்ட பெரிய அப்டேட் எதுவும் வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் ஆர்வமிழந்துள்ளார்கள். அந்த சமயத்தில் தான் அஜித் கார் ஓட்டி விபத்திற்குள்ளான வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடையே பேசுபொருளாகவும் மற்ற தரப்பினர்களிடையே மீம்களாகவும் மாறி வைரலாகியுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்ஷன்ஸ் ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன் , கமலின் இந்தியன் 2 என் பெரிய படங்களை தயாரித்து வருவதால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் படம் கைவிடப் பட்டதாக தவறான தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித் தனது 63 ஆவது படமான குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படத்தின் முதற்கட்டமாக ஆக்ஷன் காட்சி ஒன்று படப்பிடிப்பு முடிந்துள்ளது.