வாழ்க்கையில் ஒழுக்கமான மனிதனாக இருப்பதே தெய்வீகத்தன்மை என நடிகர் அனுமோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


90களின் காலக்கட்டத்தில் தனது காமெடியான நடிப்பின் மூலம் சிறிய கேரக்டர் என்றாலும் ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர்கள் ஏராளம். அவர்களில் மிக முக்கியமானவர் அனுமோகன். ரஜினி, விஜய்,அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இப்படியான நிலையில் அனுமோகன் தனக்குரிய தெய்வ நம்பிக்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


அதில், “நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன். என்னுடைய நிஜப் பெயரே ஸ்டான்லி மோகன். அது ‘அனு மோகன்’ ஆக மாறியது தனிக்கதை. நான் கிறிஸ்தவனாக இருக்கும்போது செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் கண்டிப்பாக சர்ச்சிற்கு செல்வேன். எல்லா மதத்திலும் அந்த விரதம் என்ற கொள்கை எல்லாம் உண்டு. வகுப்பறையில் என்னைத் தவிர என்னுடைய நண்பர்கள் எல்லாரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். 


எனக்கு ஸ்டான்லி என பெயர் வைத்து விட்டு வந்தவுடன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய அம்மாவிடம் என்ன பெயர் என கேட்க, அவர் ஸ்டான்லி என பதில் சொல்லியிருக்கிறார். இது வாயில் நுழைய மாட்டேங்குது நாங்கள் மோகன் என அழைக்கிறோம் என சொல்ல, பெயர் ஸ்டான்லி மோகனாக மாறியது. பள்ளியில் சேர்க்கும் போது ஸ்டான்லி பெயர் இல்லாமல் மோகன் என பதிவு செய்தார் என் அப்பா. அதுவே தொடர்ந்து விட்டது. 


ஒழுக்கமான மனிதனாக வாழ்க்கையில்  இருப்பதே தெய்வீகத்தன்மை. கடவுளிடம் கூட பொதுவான பிரார்த்தனை என்பது தான் உள்ளது. அதனால் எனக்கு என்று தனிப்பட்ட வேண்டுதல் என்பது இல்லை. பள்ளியில் இந்து நண்பர்கள் இருப்பதால் அவர்களுடன் கோயில்களுக்கு செல்வேன். ஒருநாள் என் நண்பர் ஜெயச்சந்திரனை அழைத்து செல்ல அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அன்றைக்கு ஏதோ வீட்டில் பூஜை செய்து விட்டு அவனின்  அம்மா, எனக்கு விபூதி வைத்து விட்டார்கள். 


அது ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு போற வரைக்கும் அழியாமல் இருந்தது. வீட்டுக்கு போனதும் அம்மா என்ன அது நெத்தியில என கேட்கவும், நான் நடந்ததை சொன்னேன். அவரோ விபூதியுடன் பார்க்க முகம் லட்சணமாக இருக்கிறது என சொன்னார். ஒரு கிறிஸ்தவராக அவர் எதையும் நினைக்காமல் அந்த கருத்தை தெரிவித்தார். அந்த வயதிலேயே முடிவு செய்துவிட்டேன். எம்மதமும் சம்மதம் என்பதால் வெளியே செல்லும்போது விபூதி, குங்குமம் வைக்காமல் போக மாட்டேன்” என தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: 17 Years Of Vetrimaran : தவுலூண்டு ஆங்கர்தான் கப்பலையே நிறுத்துது.. சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்யும் வெற்றிமாறன்