பொல்லாதவன்


கடந்த 2006 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகியது. பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ளன.


சினிமாவில் எத்திக்ஸ்


நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்ட வெற்றிமாறன் போட்டியாளர் ஒருவரை விமர்சிக்க நேர்ந்தது. இந்த குறும்படத்தில் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் சும்மா நின்றுகொண்டிருக்கும்போது ஒரு கட்டெறும்பை பார்த்ததும் அதை காலால் நசுக்கி கொன்றுவிடும். இந்த காட்சியைப் பார்த்த வெற்றிமாறன் இந்தப் படத்திற்கும் அவர் அந்த எறும்பைக் கொன்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய மனநிலைக்காக ஒரு எறும்பை கொள்ளும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று மிக காத்திரமாக அவரை விமர்சித்திருப்பார். சினிமாவோ அல்லது எந்த ஒரு கலை வடிவமோ சுயநலத்திற்காக சுரண்டலையோ அறத்தையோ மீறக்கூடாது என்பதை தன்னுடைய இந்த விமர்சனத்தில் அவர் கூறியிருப்பார்.

கமர்ஷியல் வெற்றிபெற்ற உள்ளூர் கதைகள்


பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன் நிலம் சார்ந்து எடுக்கப்படும் ஒரு படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். மக்கள், மண் சார்ந்த கதைகளையும், மனித உறவுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான கதைகளையும் பார்க்க எல்லா காலத்திலும் காத்திருக்கிறார்கள் என்பதை வெற்றிமாறன் நம்பினார்.சென்னையை வைத்து வடசென்னை, மதுரையை வைத்து ஆடுகளம், கோவில்பட்டியை வைத்து அசுரன் என வெவ்வேறு நிலப்பரப்பின் கலாச்சாரங்களை வெகுஜன ஊடகத்தில் அறிமுகப்படுத்தினவன் மூலம் வரலாற்றை கதைசொல்லலை சுவாரஸ்யமாக்கியவர் வெற்றிமாறன்.

ஒரு குறிப்பிட்ட கதையை தேர்வு செய்து அந்த கதையின் வரலாறு மற்றும் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஒரு உண்மையை, அரசியலை, நீதியை, அறத்தை அவர் உருவாக்குகிறார். அவரது கதாபாத்திரங்கள், படங்களின் காட்சிகள் தனித்துவமாக நிற்பது இதன் விளைவுதான். தனது படைப்பின் உண்மையை உணர்த்துவதற்காக எந்த சார்பும் இல்லாமல் தனது கதாபாத்திரங்களை எதார்த்தத்திற்கு நெருக்கமானதாக உருவாக்குகிறார். நாம் எடுக்கும் ஒவ்வொரு படமும் ஒரு மனிதனாக நம்மில் ஒரு சிறிய மாற்றத்தையாவது கொண்டு வரவேண்டும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.


தான் இயக்கியப் படங்களின் வழியாக வெற்றிமாறன் இன்று தன்னுடைய அரசியலை முழுவதும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய ஒன்றாக மாற்றியிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு இயக்குநர் தன்னளவில் எவ்வளவு சரிவிகித நிலையில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பேசி வருபவர்.