அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் தாய் என்ற உறவுக்கு இணையாக எந்த சொற்களும் இல்லை. நாம் அனைவருமே இன்று அந்த தாயால் தான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அன்னையரை நாம் வாழ்நாள் முழுவதும் போற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு எந்தவித கஷ்டமும், கவலையும் கொடுக்காமல் வாழ வேண்டும். 


பிள்ளைகள், குடும்பத்தினர் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்ச்சி என தியாகத்தின் மொத்த உருவமாக திகழும் அன்னையர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களுடைய அம்மாவை பற்றி புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 






அதில், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்” என தெரிவித்துள்ளார். விஜய்க்கு தன் அம்மா ஷோபா என்றாலே உயிர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஷோபா தான். 


ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சப்போர்ட் ஆக இருக்கும் ஷோபாவுக்காக சமீபத்தில் விஜய் சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக்கொடுத்தது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. மேலும் ஷோபாவும் விஜய்யும் பல படங்களில் பாடல்கள் இணைந்து பாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைந்து தனியார் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தனர். 


அந்த விளம்பரத்தில் விஜய்யை மடியில் போட்டு தலையை தடவி தனது அன்பை ஷோபா வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய குழுவினருக்கு நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் தான் இருந்ததாக நெகிழ்ந்து ஷோபா நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.