மக்களவை தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், 3ஆம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதனிடையே 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதொல் ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலில் மொத்தம் 1, 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு என்பது மிகத்தீவிரமாக நடந்தது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா ஆகிய கட்சிகள் இரவு, பகல் பாராமல் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தது. நேற்றுடன் பரப்புரை ஓய்ந்த நிலையில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவோடு ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14 %, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71%, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 65.68 % பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரிலும், மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர்.
நடிகர் சத்ருகன் சின்ஹா மேற்குவங்கத்தில் களம் காண்கிறார். இப்படி நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 96 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.